தூத்துக்குடி: நவதிருப்பதி திருத் தலத்தில் பராமரிக்கப்பட்டு வரும் 3 யானைகள் ஆழ்வார்திருநகரி ஆற்றுப்பாலத்தின் வழியாக தாமிரபரணி ஆற்றுக்குள் சென்று குளித்து மகிழ்ந்தனர்.ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதைச் சுற்றி 9 நவதிருப்பதி ஸ்தலங்கள் உள்ளன. அதில் ஆழ்வார்திருநகரி, இரட்டை திருப்பதி, தென்திருப்பேரை ஆகிய மூன்று தலங்களிலும் யானைகள் பராமரிக்கப்படுகின்றன. இந்த யானைகள் அனைத்தும் ஆழ்வார் தோப்பு தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள குடில்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.அந்த குடிலுக்கு அருகே தாமிரபரணி ஆறு ஓடுவதால் தினந்தோறும் யானைகளை அதன் பாகன்கள் அழைத்துச் சென்று தாமிரபரணி ஆற்றில் நீராட வைத்து அழைத்து வருவார்கள். இன்று ஒரே நேரத்தில் மூன்று யானைகளும் குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டன. யானைகள் ஆழ்வார்திருநகரி ஆற்றுப்பாலத்தின் வழியாக ஆற்றுக்குள் இறங்கின. அதில் இரண்டு யானைகள் ஆற்று நீரில் படுத்துக் கொண்டு ஜாலியாக குளியல் போட்டு மகிழ்ந்தன. மற்றொரு யானை நின்றபடி தனது தும்பிக்கையால் தண்ணீரை தனது உடல் மேல் பீச்சி அடித்துக் கொண்டு குளித்து மகிழ்ந்தன. பாகன்கள் மூன்று யானைகளையும் தேய்த்துக் குளிப்பாட்டினார்கள். ஆற்றுக்குள் படுத்துக் கொண்ட யானையில் ஒன்று குளித்து முடித்து எழும்போது தனது இரண்டு பின்னங்கால்களையும் ஊன்றியபடி தலையைத் தூக்கிக் கொண்டு எழுந்தது. இதை ஆற்றுப்பாலம் வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து ரசித்துச் சென்றனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மூன்று யானைகளும் குளித்தன. இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Be the first to comment