ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அதில் காட்டு யனைகள், புலி, மான் போன்ற விலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுவதுடன் தேசிய நெடுஞ்சாலையில் வலம் வருகின்றனர். அந்த வகையில் நேற்று கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் பகுதியில் இருந்து தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக கோவை நோக்கி தக்காளி பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. அந்த லாரி ஆசனூர் வனப்பகுதி காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது காட்டு யானை ஒன்று வாகனத்தை வழிமறித்தது.அதை கண்டு அதிர்ச்சியடைந்த லாரி ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தினார். யானை தனது தும்பிக்கையால் சரக்கு வாகனத்தில் இருந்த தக்காளி பெட்டியை ஒவ்வொன்றாக எடுத்து கீழே போட்டது. அதில் தக்காளி பழங்கள் சாலையில் கீழே விழுந்து சிதறின. அதனை யானை தனது தும்பிக்கையால் ருசித்துவிட்டு காட்டுக்குள் சென்றது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Be the first to comment