மதுரை: கூண்டுக்குள் வளர்க்கப்பட்ட வெளிநாட்டுப் பறவைகளை விழுங்கிய மூன்றரை அடி அரிய வகை நாகத்தை லாவகமாக பிடித்த வனத் துறையினர் அதை பாதுகாப்பான வனப்பகுதியில் விட்டனர். மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பாம்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட லவ் பேர்ட்ஸ், குருவி உள்ளிட்ட அபூர்வமான பறவைகளையும் வெளிநாட்டு பறவைகளையும் தனது வீட்டு மொட்டை மாடியில் பிரம்மாண்டமான கூண்டு அமைத்து வளர்த்து வருகிறார். அந்த பறவைகளைக் காண வரும் பொதுமக்களுக்கும் மாணவ மாணவியருக்கும் சுற்றுச்சூழலில் பறவைகள் மற்றும் விலங்கினங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தும் வருகிறார். இந்த நிலையில் இன்று பறவைகளுக்கு உணவளிப்பதற்காக சென்ற ராஜன், கூண்டுக்குள் இருந்த பறவை ஒன்று இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மற்ற பறவைகளும் பயந்த நிலையில் கூச்சலிட்ட வண்ணம் இருப்பதைக் கண்டு உள்ளே பார்த்துள்ளார். அப்போது பாம்பு ஒன்று பறவைகள் வசிக்கிற கூண்டுக்குள் வைக்கப்பட்டிருந்த தொட்டிக்குள் நெளிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.உடனடியாக இது குறித்து விலங்கு நல ஆர்வலரான ஸ்நேக் பாபுவிற்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த ஸ்நேக் பாபு சுமார் மூன்றரை அடி நீளமுள்ள பொறி நாக பாம்பை மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். அவர்கள் அந்த பாம்பை நாகமலை புதுக்கோட்டை வனப்பகுதியில் விட்டனர். இதுகுறித்து அவர் கூறுகையில், புறா, லவ் பேர்ட்ஸ் வளர்க்கும் பகுதிகளில் இதுபோன்ற பாம்புகள் வருவது சகஜம் தான் என்றும், ஆனால் அரியவகை பொறி நாக பாம்பு வந்திருப்பது ஆச்சர்யமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
Comments