கோயம்புத்தூர்: வால்பாறையில் சுற்றுலா பயணிகளின் வாகனத்தை ஐந்து யானைகள் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வால்பாறை பகுதியில் இருந்து 80 கிலோ மீட்டர் வனப் பகுதியில் செல்ல சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் மழுக்கபாறை அதிரப்பள்ளி சாலையில் அடிக்கடி காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல கேரளா வனத் துறையினர் அனுமதித்து உள்ளனர்.கடந்த சில நாட்களாகவே வனவிலங்குகள் பகல் நேரத்தில் சாலையில் நடந்து வாகனங்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை அங்கமாலி பகுதியில் இருந்து வால்பாறைக்கு இரண்டு கார்களில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். அப்போது, வாட்ச் மரம் என்ற இடத்தில் அவர்களின் வாகனம் பழுதாகி நின்றது. அதை சரி செய்வதற்காக மற்றொரு காரில் ஏறி சாலக்குடி பகுதிக்கு சென்று மெக்கானிக் அழைத்து வந்துள்ளனர். அப்போது, கார் நிறுத்தி வைத்த இடத்தில் வந்து பார்க்கும் பொழுது சுமார் ஐந்து யானைகளின் கூட்டம் காரை உடைத்து சேதப்படுத்தியும், தலைகீழாக புரட்டி உடைத்து சேதப்படுத்தின. இதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த வனத் துறையினர் அப்பகுதியில் சுற்றி திரிந்த யானைகளை விரட்டி பின்பு காரை எடுத்துச் சென்றனர்.
Be the first to comment