கோயம்புத்தூர்: அதரப்பள்ளி வனப் பகுதிக்குள் கூட்டமாக உணவு தேடி வந்த யானைகளுள் தும்பிக்கை இல்லாத குட்டியானைக்கு தாய் யானை அன்புடன் தனது தும்பிக்கையால் உணவு ஊட்டிவிடும் வீடியோ காட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.வால்பாறையை அடுத்துள்ள தமிழக கேரள எல்லை பகுதிகள் மளுக்கப்பாறை, சாலக்குடி ஆகும். இந்த பகுதிகளுக்கு செல்லும் வழியில் அதரப்பள்ளி வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதிகுள் புலி, மான், யானை, கரடி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. பருவமழை காலம் என்பதால் உணவு தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக அதிரபள்ளி வனப்பகுதிக்கு வருகின்றன. அந்த வகையில், நேற்று யானைகள் கூட்டமாக வந்து மழையில் விழுந்து கிடந்த தென்னை மரத்தின் மட்டைகளை சாப்பிட்டு வந்தன. அதில் ஒரு தாய் யானை, தும்பிக்கை இல்லாத தனது குட்டி யானைக்கு தென்னை மட்டைகளை ஊட்டி விட்டது. இதனை சுற்றுலா பயணிகள் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்ட நிலையில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தனது குட்டிக்கு தும்பிக்கை இல்லாததால் உணவை வாயில் எடுக்க முடியாது என்பதை உணர்ந்த தாய் பாசமாக கொஞ்சம் கொஞ்சமாக அதனை தும்பிக்கையால் குட்டிக்கு ஊட்டிவிட்டது. குட்டி யானை குறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, “பிறந்து எட்டு மாதங்களான இந்த குட்டி யானை 5 மாதங்களாக இதே காட்டுப் பகுதிக்குள் தான் உள்ளது. இந்த குட்டியானை பிறக்கும்போதே தும்பிக்கை இல்லாமல்தான் இருந்தது. எப்போதாவதுதான் இதுபோல் கூட்டத்துடன் சேர்ந்து வரும். கடைசியாக நான்கு மாதங்களுக்கு முன் இதுபோல், கூட்டத்துடன் சேர்ந்து உலா வந்தது. இந்தியாவிலேயே தும்பிக்கை இல்லாமல் இருக்கும் யானை என்றால் அது இது தான். தற்போது தாய் பராமரிப்பில் இருக்கிறது. அந்த யானையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்றார்.
Be the first to comment