தேனி: கைலாசநாதர் கோயில் கிரிவலப் பாதையில் உள்ள பாறை மீது சிறுத்தை ஒன்று அமர்ந்திருக்கும் விடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.பெரியகுளத்தை அடுத்த கைலாசபட்டிக்கு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை சுற்றி கிரிவலப் பாதை உள்ளது. இந்த பாதை வழியாக மாலை நேரங்களில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இந்நிலையில் அந்த கிரிவலப் பாதைக்கு மேல் உள்ள பாறையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பக்தர்கள் வனத்துறைக்கு புகார் அளித்துள்ளனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள விவசாய விளைநிலங்களில் வளர்க்கப்படும் 5-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் சிறுத்தை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சிறுத்தை ஒன்று கிரிவலப் பாதைக்கு மேல் உள்ள மலை பாறையில் அமர்ந்திருக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து பேசிய பக்தர்கள், “தனியாகவோ, விடிய காலை மற்றும் மாலை நேரங்களில் கிரிவலப் பாதையை சுற்றி வரவே பயமாக உள்ளது. சிறுத்தை கடித்துவிடுமோ என நிம்மதியில்லாமல் பயத்துடன் சாமியை தரிசனம் செய்ய வேண்டியுள்ளது” என கூறினர்.
Be the first to comment