கோயம்பத்தூர்: பிரதமர் கோவை வருகையினை முன்னிட்டு கோவை விமான நிலைய வளாகத்தில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களை போலீசார் மீட்பு வாகனங்கள் மூலம் அகற்றினர்.தென்னிந்திய இயற்கை வேளாண்மை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை பிற்பகல் தனி விமானம் மூலம் கோவை வருகிறார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னதாகவே விமான நிலைய பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் நிறுத்த கூடாது என காவல் துறை மற்றும் கோவை விமான நிலையம் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இருந்தது. மேலும், கோவை விமான நிலையத்தில் இன்றும் நாளையும் கார்களை நிறுத்தி செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே விமான நிலையத்தில் பயணிகள் நிறுத்தி விட்டு சென்ற கார்களை அகற்றும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர். மீட்பு வாகனங்கள் மூலம் கார்களை அகற்றிய காவல் துறையினர் அவற்றை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். இரு தினங்களுக்கு பயணிகளை இறக்கி விடவும், பிக்கப் செய்யவும் மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவையில் பிரதமர் வரும் நேரத்தில் எந்த விதமான அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்ற அடிப்படையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, காவல் துறையினர் இன்று முதல் விமான நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை மாநகர் முழுவதும் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிகழ்ச்சி நடைபெறும் கொடிசியா வளாகம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. விமான நிலையம் பார்க்கிங் பகுதியில் இன்று காலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை வாகனங்களில் நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
Comments