வேலூர்: கனமழையால் கால்வாய் உடைந்து வெள்ளநீர் புகுந்ததால் மோதிரமேடு கிராம மக்கள் கயிறு கட்டி அதன் மூலமாக மறுபுறம் செல்லும் அவலம் நிலவுகிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சித்தாத்தூர் கிராமம் அருகே உள்ள மோதிரமேடு என்ற பகுதியில் 50-க்கும் மேற்பட்டோர் வசிக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் விவசாயம் செய்து வருகிறார்கள். இவர்கள் நிலத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஆற்றுக்கால்வாய் உடைந்து தண்ணீர் பட்டா நிலத்திற்கும், வீடுகள் வழியாகவும் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கிராம மக்கள் தங்கள் நிலங்களுக்குள் செல்லவும், வீடுகளுக்கு செல்லவும் பல அடி உயரத்திற்கு செல்லும் தண்ணீரில் ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர்.சில இடங்களில் வெள்ள நீர் அதிக அளவு செல்வதால் இரண்டு மரங்களுக்கு இடையே கயிறு கட்டி அதன் மூலம் ஆபத்தான முறையில் கிராம மக்கள் கடந்து செல்கின்றனர். அதே போல் விவசாய நிலத்திற்கு செல்ல முடியாமலும், நிலத்திற்கு தேவையான இடுப்பொருட்கள் கொண்டு செல்லவும் விளைநிலங்களில் விளைந்த பயிர்களை இப்பகுதிக்கு கொண்டு வரவும் வழி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.பல இடங்களில் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் பெருமளவு சேதம் அடைந்துள்ளது. ஒவ்வொரு முறையும் வெள்ளம் செல்லும் போது இந்த கால்வாய் உடைந்து விளை நிலங்கள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதாகவும் இது குறித்து தொடர்ந்து பல வருடங்களாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் கிராம மக்கள் தெரிவித்தனர்.
Be the first to comment