மதுரை: தொடர் மழை காரணமாக மதுரை யானை மலையில் மேக கூட்டங்கள் நகர்ந்து சென்று பனிமலை போல காட்சியளித்த நிகழ்வை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.மதுரை மாநகரில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மதுரை மாவட்டம் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மேலும், வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மதுரை வைகை ஆற்றில் இரண்டு கரைகளையும் தொட்டு தண்ணீர் நிரம்பி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மதுரையின் புறநகர் பகுதியான ஒத்தக்கடை யானைமலை சுற்றுவட்டார பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்த நிலையில், யானை மலையை ஒட்டி மேக கூட்டங்கள் கடந்து சென்றது. அப்போது, வெறும் பாறைக்குன்றாய் காட்சி அளிக்கும் யானைமலை பனிமலையை போன்று மாறி காண்போரை வியக்க வைத்தது. ஒரே நேரத்தில் மேகக் கூட்டங்கள் யானைமலை முழுவதிலும் போர்வை போர்த்தியது போல கடந்து சென்ற வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த காட்சியை அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் சாலையில் நின்றபடி பார்த்து ரசித்துச் சென்றனர்.
Be the first to comment