தஞ்சாவூர்: பழவாத்தான்கட்டனை பகுதியில் 50 நாட்டு கோழிகளை தாக்கிய தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கும்பகோணம் அருகே பழவாத்தான்கட்டனை ஊராட்சியில் உள்ள விவேகானந்தர் நகரில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் ஏராளமான நாட்டு ரக கோழிகளை கூண்டில் வைத்து வளர்த்து வருகிறார். நேற்று நள்ளிரவில் கூட்டமாக வந்த தெரு நாய்கள் கூண்டில் வளர்க்கப்பட்ட 50 கோழிகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி, அவற்றை கடித்து குதறியதுடன், சில கோழிகளை வெளியே தூக்கி கொண்டும் ஓடியது. இதனால் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நாட்டுக் கோழிகளை இழந்த கார்த்திக் அப்பகுதி மக்களுடன் இணைந்து நாய்களால் கடித்துக் குதறி உயிரிழந்த கோழிகளை கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கொண்டுவந்து போட்டு, தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாச்சியார்கோவில் காவல் ஆய்வாளர் ராஜேஷ், வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய அலுவலர்களிடம் பேசி, விரைந்து இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து பழவாத்தான்கட்டனை பகுதி மக்கள் கலைந்து சென்றனர். தெரு நாய்கள் நாட்டுக் கோழிகளை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
Be the first to comment