கோயம்புத்தூர்: இயந்திர உதிரிபாகங்கள் விற்பனை கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து அருகில் உள்ள குடியிருப்புகளிலும் பரவிய நிலையில் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.காட்டூர் பட்டேல் ரோடு பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள இயந்திர உதிரிபாகங்கள் (Spare Parts) விற்பனை கடையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதில் கடைக்குள் இருந்த ஆயில் மற்றும் பிளாஸ்டிக் உதிரி பாகங்கள் தீப்பிடித்ததால், சில நிமிடங்களிலேயே தீ மளமளவென பரவத் தொடங்கியது. மேலும் உதிரிபாகக் கடைக்கு அருகில் உள்ள குடியிருப்புகளிலும் தீயானது வேகமாக பரவியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. இருப்பினும், குறுகலான வீதிகள் மற்றும் கொழுந்து விட்டு எரியும் தீயினால், தீயணைப்பு வீரர்கள் உள்ளே நுழைவதில் பெரும் சவால்கள் ஏற்பட்டன. அப்போது நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அப்பகுதி பொதுமக்களும், போலீசாருடன் கைகோர்த்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்த தீ விபத்திற்கு மின் கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் கவனக்குறைவா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரக் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதனிடயே தீயணைப்பு துறையினருக்கும் உதவியாக விமானப்படை மற்றும் கப்பல் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் கூறுகையில், "இந்த தீ விபத்தால் எந்த ஒரு உயிர் பாதிப்பும் ஏற்படவில்லை. பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அறிவுரைகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. இரண்டரை மணி நேரத்திற்குள் தீ அணைக்கப்பட்டுவிட்டது.தொடர் விசாரணை மேற்கொண்டு எதனால் தீ விபத்து ஏற்பட்டது என்று தெரிவிக்கின்றோம்” என்றார்.கோவை மாநகர காவல் ஆணையாளர் கண்ணன் பேசுகையில், ”இந்த சம்பவம் குறித்து தெரிந்தவுடன் குறிப்பிட்ட இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் வந்துவிட்டோம். உயிர் சேதம் ஏற்படக்கூடாது என்பதற்காக பொதுமக்களையும் இங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டோம்” என்றார்.
Comments