ஈரோடு: தாளவாடி அருகே கொங்கள்ளி கிராமத்திற்குள் புகுந்து ஒற்றை காட்டு யானை மக்களை ஆக்ரோஷமாக துரத்தும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் தாளவாடி சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில், இரு மாநில எல்லையில் முகாமிட்டிருந்த யானை கூட்டம் இன்று காலை தமிழக எல்லைக்குள் புகுந்தது. இதில், பிரிந்து வந்த ஒற்றை காட்டு யானை தாளவாடி அருகே உள்ள கொங்கள்ளி கிராமத்திற்குள் புகுந்து அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தியது. தொடர்ந்து, குடியிருப்பு பகுதிகளில் புகுந்து மக்களை ஆக்ரோஷமாக துரத்தியது.இதில், அப்பகுதியில் இருந்த மக்கள் சத்தம் போட்டபடி அலறி அடித்து ஓடினர். இதனையடுத்து, அனைவரும் சத்தம் போட்டு ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் அனுப்பினர். இதனை அப்பகுதியில் இருந்த மக்கள் வீடியோ பதிவு செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “கூட்டம் கூட்டமாக விவசாய நிலங்களில் உலா வரும் காட்டு யானைகளால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதால் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, வனத்துறையினர் இந்த யானை கூட்டத்தை கர்நாடக மாநில அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.
Be the first to comment