வேலூர்: மோர்தானா அணையில் இருந்து நெல்லூர்பேட்டை பெரிய ஏரிக்கு நீர் எடுத்து செல்லும் கால்வாய் உடைந்து வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. அதனால், தென்தமிழகத்தின் அநேக இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அதனால், அப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழியும் நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் வேலூர் குடியாத்தத்தில் பெய்த மழையால் மோர்தானா அணையில் இருந்து அதிகபடியான நீர் நெல்லூர்பேட்டை பெரிய ஏரிக்கு செல்கிறது. இந்நிலையில் நீரை எடுத்து செல்லும் வலது புற கால்வாய் திடீரென நீரின் வேகம் தாங்காமல் உடைந்தது. அதனால், நெல்லூர்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட லிங்குன்றம், பாலகிருஷ்ணா நகர், சின்னஒட்டு பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது. சுமார் மூன்று அடி உயரத்திற்கு நீர் வீட்டுக்குள் புகுந்துள்ளதால் மக்கள் செய்வதறியாமல் திணறி நின்றனர்.இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் உடனடியாக ஊருக்குள் வந்து மீட்பு நடவடிக்கைகளை தொடங்கினர். முதலில் கால்வாயிலிருந்து வீடுகளுக்குள் புகுந்த நீரை ஏரிக்கு திருப்பி விடுவதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் சாலைகளை தோண்டி நீர் வெளியேற வழி ஏற்படுத்தினர். வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் கிராம மக்கள் அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
Be the first to comment