தஞ்சாவூர்: இஸ்லாமிய தம்பதி தங்களது வேண்டுதல் நிறைவேறியதால் தஞ்சை அருள்மிகு வீரமா காளியம்மன் ஆலயத்தில் கிடா வெட்டி, பூஜை செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.தஞ்சை நாவலர் நகரில் மளிகைக்கடை நடத்தி வருபவர் ஜாகிர் உசேன். இவருடைய 25 வயது மகனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். ஜாகிர் உசேன் பெரும்பாலும் அப்பகுதியிலுள்ள இந்து மக்களிடம் சகோதர சகோதரிகள் என்று உறவு முறையில் பழகி வந்துள்ளார். இவரது மகனின் நிலைமையை பார்த்த நாவலர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜாகிர் உசேனுக்கு ஆறுதல் கூறியதோடு, அந்த பகுதியில் மிகவும் பிரசித்திபெற்று விளங்கும் அருள்மிகு வீரமா காளியம்மன் ஆலயத்தில் பிரார்த்தனை செய்யுமாறு கூறியுள்ளனர்.மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் எனக் கூறியதால் ஜாகிர் உசேன் மனம் உருகி வீரமா காளியம்மன் ஆலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார். அதனையடுத்து ஜாகிர் உசேன் மகன் பூரண குணமடைந்து வீடு திரும்பியதால் வேண்டுதலை நிறைவேற்ற முடிவு செய்திருக்கிறார். அதன்படி நேற்று தஞ்சை நாவலர் நகரில் உள்ள அருள்மிகு வீரமா காளியம்மன் ஆலயத்தில் தம்பதியாகச் சென்று பொங்கல் வைத்து படையலிட்டனர். பின்னர் கிடாவெட்டி அந்த பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு கறி விருந்து வைத்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொண்டனர். தனது மகன் குணமாகியதற்கு இந்த பகுதியில் உள்ள மக்கள்தான் காரணம் எனக் கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார் ஜாகிர் உசேன்.
Comments