செங்கல்பட்டு: கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்கும் நபர்கள் அடையாளம் தெரிந்தும் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி முகையூர் கிராம மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த முகையூர் பகுதியில் கள்ளத்தனமாக மது விற்கும் நபர்களை அடையாளம் கண்டும் அப்பகுதி மக்கள் காவல் துறையில் புகார் அளித்தும் கூவத்தூர் போலீசார் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் இன்று கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் அவர்கள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் எதிராக கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், காவல்துறை அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்பே சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Be the first to comment