கோயம்புத்தூர்: கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தொண்டாமுத்தூர், ஆனைகட்டி, மாங்கரை, தடாகம் ஆகிய கிராமங்களில் அவ்வப்போது உணவு தேடி வன விலங்குகள் காட்டை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்வது தொடர்கதையாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தொண்டாமுத்தூர் பகுதியில் மனிதர்களை அச்சுறுத்தி வந்த ’ரோலக்ஸ்’ என்ற ஒற்றை காட்டு யானையை வனத் துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து பொள்ளாச்சி டாப்ஸ்லிப்பில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் நேற்று இரவு தடாகம் அடுத்த வரப்பாளையம் கிராமத்திற்குள் ஒற்றை யானை புகுந்துள்ளது. தமிழரசன் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தியது. பின்னர் அருகில் உள்ள மாதேஷ் என்பவரது வீட்டு காம்பவுண்ட்க்குள் நுழைந்த யானை வீட்டின் வாசற்படியில் வைத்திருந்த அரிசி மற்றும் மக்காச்சோள மாவு பாக்கெட்டுகளை எடுத்து சாப்பிட்டு விட்டு அங்கிருந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இது குறித்த வீடியோ காட்சி வெளியாகி அப்பகுதி மக்களை பீதியடைய செய்துள்ளது.இது பற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “தடாகம் மற்றும் மாங்கரை பகுதியில் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகமிட்டுள்ளன. அதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் தோட்டத்தில் வசிப்பவர்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம். விவசாய நிலங்களில் புகும் யானைகளை தாங்களாகவே விரட்டுவோ அல்லது பட்டாசு வெடித்து விரட்டவோ கூடாது. தோட்டத்திற்குள் யானை புகுந்தால் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என அறிவுறுத்தி உள்ளனர்.
Be the first to comment