காஞ்சிபுரம்: ஒரு ரூபாய் நாணய அளவில் அருகம் புல்லால் வரையப்பட்ட இலை வடிவ விநாயகர் ஓவியம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யம்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் ஓவியர் பா.சங்கர். உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படும் நிலையில், விநாயகர் ஓவியத்தை வித்தியாசமான முறையில் வரைய வேண்டும் என்று விரும்பினார். அதன் வெளிப்பாடு தான் இலை வடிவ விநாயகர் ஓவியம். இந்த இலை வடிவ விநாயகர் ஓவியத்தை வரைய, விநாயகப் பெருமானுக்கு உகந்த அருகம் புல்லை மட்டுமே ஓவியர் சங்கர் பயன்படுத்தியுள்ளார். அருகம் புல்லைக் கொண்டு அரச இலை வடிவில், ஒரு ரூபாய் நாணய அளவில் விநாயகரை தத்ரூபமாக வரைந்துள்ளார்.மேலும், அந்த விநாயகருக்கு இலை வடிவ விநாயகர் என பெயரிட்டதோடு மட்டுமல்லாமல், ஓவியம் வரைவதற்கு பிரஷ் பயன்படுத்தாமல் அருகம் புல்லைக் கொண்டே வரைந்து வர்ணம் தீட்டியுள்ளார். அவர் வரைந்த இந்த இலை வடிவ விநாயகர் ஓவியம் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Be the first to comment