திருநெல்வேலி: ரெட்டியார்பட்டி இரட்டை மலையில் நேற்று பெய்த மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.நெல்லை பாளையங்கோட்டை அடுத்த ரெட்டியார்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் இரட்டை மலை அமைந்துள்ளது. இரட்டை மலைக்கு நடுவே அமைந்துள்ள இந்த நான்கு வழிச்சாலை நெல்லை மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் இந்த இரட்டைமலை மீது ஏறி செல்பி எடுப்பது, ரீல்ஸ் வீடியோ எடுப்பது போன்ற பொழுதுபோக்கில் ஈடுபடுகின்றனர். இந்த இரட்டை மலை அடிவாரத்தில் தற்போது அரசு சார்பில் பொருநை அருங்காட்சியகம் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. மழைக் காலங்களில் இதில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு வருவதால் மலை அடியில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென ரெட்டியார்பட்டி இரட்டை மலையின் ஒரு பகுதியில் மண் மற்றும் பாறைகள் சரிந்து கீழே விழுந்ததால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நேற்று பெய்த மழை காரணமாக மலையில் இருந்த மரங்களின் வேர்களில் அரிப்பு ஏற்பட்டு மண் சரிந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் கவனத்திற்கு தகவல் சென்றதை தொடர்ந்து இன்று அங்கு பேரிகார்டர் வைக்கப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் எதிர்காலத்தில் பாதிப்புகள் ஏற்படாத வகையில் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்ய இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
Be the first to comment