தூத்துக்குடி: தீபாவளியை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.நாடு முழுவதும் இன்று தீபாவளி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலுக்கு பக்தர்கள் புத்தாடை அணிந்து குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்த வண்ணம் உள்ளனர். கோயிலுக்கு வருகை தரும் அவர்கள் பொது தரிசனம், கட்டண தரிசனம் மற்றும் சிறப்பு தரிசன வரிசைகளில் நின்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து, கோயிலுக்கு வெளியே நின்ற கோயில் யானை தெய்வானையிடம் ஆசி பெற்றனர். அதோடு கோயில் கடற்கரை பகுதியில் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். மேலும் கோயிலுக்கு வந்த பக்தர்கள் குடும்பத்துடன் கோயில் வளாகத்தில் நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். நாளை மறுநாள் புதன் கிழமை திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment