கோயம்புத்தூர்: இரவு நேரத்தில் ஊருக்குள் கூட்டமாக வந்த யானைகளுள் ஒன்று வேட்டை தடுப்பு காவலர்களை பார்த்து பயந்து குடிசைக்குள் தலையை விட்டு நிற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியான வால்பாறை வனச்சரகத்திற்கு உள்பட்ட பகுதிகளில் சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் உள்ள நிலையில், தினந்தோறும் வேட்டை தடுப்பு காவலர்கள் இரவு நேரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஐயர்பாடி ரோப்பை பகுதியில் யானைகள் கூட்டமாக அந்த சாலையில் வலம் வந்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள குப்பை தொட்டிகளை ஆய்வு செய்த யானைகளை அவ்வழியாக வந்த லாரி ஓட்டுநர் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின், இதுகுறித்து வேட்டை தடுப்பு காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் உடனடியாக அங்கு வந்து யானையை விரட்டும் பணியில் இறங்கினர்.அப்போது வேட்டை தடுப்பு காவலர்கள் எழுப்பிய சத்தத்தை கேட்டு யானைகள் பயந்து ஓட தொடங்கின. அதில் ஒரு குட்டி யானை மட்டும் அருகில் இருந்த குடிசைக்குள் தலையை விட்டு ஒளிந்து கொண்டது போல் நின்றது. இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதையடுத்து வேட்டை தடுப்பு காவலர்கள் விரட்டியதில் யானைகள் தாறுமாறாக ஊருக்குள் ஓடி அங்கிருந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர் வீடுகளை சேதப்படுத்தியது. நல்வாய்ப்பாக அங்கு யாரும் இல்லாத காரணத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Be the first to comment