ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி சாலையில் உலா வரும் கழுதைப்புலி நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி பகுதியில் சிறுத்தை, புலி, யானை மற்றும் காட்டெருமைகள் அதிகளவில் உள்ளன. சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் வனவிலங்குகள் சாலையை கடந்து செல்வது வழக்கம். இதற்கிடையே, சத்தியமங்கலத்தில் இருந்து மைசூருக்கு காரில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள், சாலையோரம் கழுதைப்புலி தென்பட்டதை பார்த்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இரவு நேரத்தில் உலாவிய கழுதைப்புலியை இளைஞர்கள் கார் வெளிச்சத்தில் பதிவு செய்ததால் கழுதைப்புலி பயந்து ஓடும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. இதுகுறித்து சத்தியமங்கலம் வனச் சரக அலுவலர் தர்மராஜூவிடம் கேட்டபோது, "கழுதைப்புலி உலாவும் வீடியோ வைரலாகியுள்ளது. பண்ணாரி காட்டில் எடுக்கப்பட்டதா என்பதை ஆய்வு செய்து வருகிறோம், வனவிலங்குகளை வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தார்.மக்கள் வசிப்பிடத்தில் கழுதைப்புலி தென்படுவது அரிதான ஒன்று; இருப்பினும் அது தென்பட்டது குறித்து வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Comments