வேலூர்: கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக தொரப்பாடி பகுதியில் உள்ள ஏரி நிரம்பி வழிந்துள்ளது. இதனால் குடியிருப்புகுள் புகுந்த தண்ணீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தொரப்பாடி பகுதியில் ஏரி உள்ளது. கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால் அந்த ஏரி நிரம்பி வழிந்தது. அதன் உபரி நீர் ஊருக்குள் புகுந்து பொதுமக்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஏரி மற்றும் கால்வாய் பகுதிகளை சரியாக பராமரிக்காததும், அந்த ஏரியை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வரும் கழிவுநீரை திறந்தவெளியில் விடுவது, மேலும் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் ஏரிக்குள் கொட்டப்படுவது போன்ற காரணங்களால் நீர் நிரம்பி குடியிருப்புப் பகுதிக்குள் வெள்ளம் புகுந்துள்ளதாக குற்றம் சாட்டினர்.இது தொடர்பாக நீர்வளத் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனுக்கள் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஏரியின் உபரிநீரை மாற்று பாதையில் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என முன்பே கோரிக்கை வைத்திருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் மௌனம் சாதித்து வந்ததாகவும், தொழில்நுட்ப தீர்வுகள் எதுவும் அமல்படுத்தப்படவில்லை என்றும் மக்கள் குற்றம்சாட்டினர்.
Be the first to comment