ஈரோடு: சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடம்பூர், குன்றி, மல்லியம் துர்க்கம் ஆகிய மலைப்பகுதியில் நேற்றிவு கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் ஓடைகளில் இருந்து வந்த மழைநீர் ஒன்றாக சேர்ந்து அருவியாக உருவாகி, மல்லியம்மன் கோயில் மீது ஆர்ப்பரித்து கொட்டியது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக இன்று அதிகாலை அருவில் கொட்டும் தண்ணீரின் அளவு அதிகரித்து, மல்லியம்மன் கோயிலை தாண்டி கொட்டியது. இதனால், கடம்பூர் சத்தியமங்கலம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் சாலையில் நின்றன. மல்லியம்மன் கோயில் சாலையில் மழைநீர் வடிந்த பிறகே அங்கிருந்த வாகனங்கள் புறப்பட்டு சென்றன. கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கே.என் பாளையம் முதல் கடம்பூர் வரையிலான மலைப்பாதையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. இதனிடையே, நீரோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Be the first to comment