திண்டுக்கல்: கொடைக்கானலில் ஒரே நேரத்தில் உறைபனி, பனிமூட்டம், வெயில் என மூன்று காலநிலைகள் ஏற்பட்டு சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்தியது.மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உறைபனி மற்றும் பனிமூட்டம் ஏற்படுவது வழக்கமான ஒன்று. தற்போது வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸுக்கு கீழ் பதிவாகி வருவதால், இயற்கை அழகு மேலும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில், கொடைக்கானலில் இன்று அதிகாலையில் அபூர்வமான இயற்கை அதிசயம் நிகழ்ந்துள்ளது.கீழ் பூமியின் ஜிம்கானா பகுதியில் ஒரே நேரத்தில் உறைபனி, பனிமூட்டம், வெயில் என மூன்று வெவ்வேறு காலநிலைகள் நிலவியதால் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் வியப்பில் ஆழ்ந்தனர். புல்வெளிகளில் உறைபனி முத்து முத்தாக படர்ந்து வெண்ணிற போர்வை போர்த்தியது போல காட்சியளித்தது. அதற்கு மேலே அடர்த்தியான பனிமூட்டம் படர்ந்திருந்தது. அதே நேரம், மலை மீது வெயில் மிகவும் பிரகாசமாக காட்சியளித்தது. இந்த மூன்று காலநிலைகளும் ஒரே நேரத்தில் தென்பட்டதால், அப்பகுதியில் நடைபயிற்சிக்கு சென்றவர்கள் ஆர்வமுடன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
Be the first to comment