நீலகிரி மாவட்டத்தில் தற்போது பனியின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், புல்வெளிகள் மற்றும் செடி கொடிகள் காய்ந்து கருகி வருகிறது. இதனால், வனவிலங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வனவிலங்குகள் நகரப் பகுதிகளுக்கு உணவு தேடி படையெடுத்து வருகிறது.அந்த வகையில், உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. நேற்றிரவு ஆவின் பால் உற்பத்தி நிலையத்தில், திடீரென புகுந்த கரடி பால், நெய் உள்ளிட்ட ஆவின் தயாரிப்புகளை ஆர்வத்துடன் ருசித்து பார்த்த காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.பால் சேகரிப்பு மற்றும் உற்பத்தி நடைபெறும் பகுதியில் சுதந்திரமாக உலாவிய கரடி, அங்கிருந்த பால் பாக்கெட்டுகள், நெய் உள்ளிட்ட பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக முகர்ந்து பார்த்து, சிலவற்றை சுவைத்தது. பயமின்றி, அவசரமின்றி அமைதியாக நடந்துகொண்ட அந்த கரடியின் செயல்பாடுகள், பார்க்கும் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.இந்த முழு நிகழ்வும் காணொளியாக வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “ஆவின் தரத்தை ஆய்வு செய்ய வந்த ஆய்வாளர் கரடி” என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் நகையாடி வருகின்றனர்.
Be the first to comment