ஈரோடு: கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக குட்டையூர் பள்ளத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது.ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பர்கூர் தட்டக்கரை அருகே அமைந்துள்ளது குட்டையூர் கிராம். இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கர்நாடகாவுக்கு அருகில் அமைந்துள்ள பகுதி என்பதால், இங்குள்ள மக்கள் தொழில் ரீதியாக கர்நாடாகவுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அவ்வாறு கர்நாடகாவுக்கு செல்பவர்கள், குட்டையூர் அருகில் இருக்கும் பள்ளம் பகுதி வழியாகத்தான் சென்று வர வேண்டும்.இந்நிலையில், கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, குட்டையூர் பள்ளம் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் குட்டையூர் கிராம மக்கள் கர்நாடகாவுக்கும், கர்நாடகாவில் இருந்து குட்டையூருக்கும் செல்ல முடியாமல் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். முன்னதாக, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த பகுதியில் பாலம் அமைக்க ஆய்வு செய்த நிலையில், இதுவரையில் கட்டி தரப்படவில்லை என அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பாலம் இருந்திருந்தால் எளிதாக நாங்கள் சென்று வந்திருக்க முடியும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Be the first to comment