சத்தியமங்கலம்: பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் லாரியை வழிமறித்து மூட்டைகளிலிருந்து மக்காச்சோளத்தை யானை ஒன்று எடுத்துச் சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த பகுதியில் காட்டு யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுற்றித் திரிகின்றன. இந்த நிலையில், பண்ணாரி திம்பம் அருகே மக்காச்சோளம் ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு காட்டு யானை திடீரென லாரியை வழிமறித்து நின்றது. இதனால் ஓட்டுநர் உடனடியாக லாரியை நிறுத்தினார். அப்போது லாரியில் இருந்த மூட்டைகளில் இருந்து தும்பிக்கையால் மக்காச்சோளத்தை எடுத்து தின்றது. யானை நிற்பதைக் கண்ட மற்ற வாகன ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்க முடியாமல் நிறுத்தினர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்காச்சோளத்தை தின்று முடித்த பின் அந்த யானை மெதுவாக சாலை ஓர வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது. இதன் பின்னர் வாகனங்கள் புறப்பட்டு சென்றன.
Be the first to comment