திண்டுக்கல்: கொடைக்கானலில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் மற்றும் கடுங்குளிர் நிலவியதால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக வறண்ட வானிலை நிலவிய நிலையில், நேற்று இரவு முதல் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் கடும் பனிமூட்டமும், கடுங்குளிரும் நிலவி, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கொடைக்கானல் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் அதிகாலை முதல் பனிமூட்டம் காணப்பட்டது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், வேகமாக வாகனம் இயக்க வேண்டாம் எனவும் போக்குவரத்து காவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடுங்குளிருடன் கூடிய இந்த பனிமூட்டம் காரணமாக, அதிகாலை நடைபயிற்சி சென்றவர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், அடுத்த சில நாட்களுக்கு கொடைக்கானல் பகுதியில் சாரல் மழை தொடர வாய்ப்புள்ளதாகவும், பனிமூட்டம் குறையாததால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
Be the first to comment