தென்காசி: கடந்த இரண்டு தினங்களுக்கும் மேலாக தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனையடுத்து அருவிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும், தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் நலன் கருதியும், பாதுகாப்பு காரணங்கள் கருதியும் குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் 24 மணி நேரமும் தற்போது அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தில் கனமழையினால் சாலையோர கடை வியாபாரிகளும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில், தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment