தேனி: டி.அணைக்கரைப்பட்டியில் உள்ள சடையாண்டி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற ஐப்பசி திருவிழா நேற்று நள்ளரவு வெகு சிறப்பாக தொடங்கிய நிலையில் பக்தர்களுக்கு தடபுடல் கறி விருந்து அளிக்கப்பட்டது.ஆண்டிபட்டி அருகே உள்ள டி.அணைக்கரைப்பட்டி கிராமத்தில் சடையாண்டி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த ஐப்பசி திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஐப்பசி திருவிழா நேற்று நள்ளிரவு கோலாகலமாக தொடங்கியது. முதலில் சடையாண்டி சாமி உருவ சிலைக்கு சிறப்பு பூஜைகள், ஆரதணைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன் இருந்த சடையாண்டிக்கு பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.இந்த விழாவில் டி.அணைக்கரைப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் பங்கேற்றனர். திருவிழாவின் சிறப்பு அம்சமாக நள்ளிரவில் 105 கிடா வெட்டி சடையாண்டிக்கு படையலிடப்பட்டது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரமாண்ட கறி விருந்து வழங்கப்பட்டது. நள்ளிரவு முதல் அதிகாலை வரை விடிய விடிய நடைபெற்ற கறி விருந்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
Be the first to comment