மதுரை: திமுக வசமுள்ள மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரசுக்கு வாக்கு கேட்டு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டம் ஒன்றில் மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோரை விமர்சனம் செய்து பொதுக்கூட்ட மேடையில் அவர் பேசியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் திமுக காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்படும் நிலை உருவானதால், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார். இந்த பேச்சுவார்த்தையில் திமுக காங்கிரஸ் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், மதுரை வடக்குத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடப் போவது போல் அதன் வேட்பாளருக்கு வாக்கு கேட்டு அந்த கட்சியின் சார்பில் சுவரொட்டிகள் தொகுதி முழுவதும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. இது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே மீண்டும் புகைச்சலை உருவாக்கியுள்ளது.
Comments