நீலகிரி: குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடி அங்கிருந்த வீட்டின் கதவை தட்டிய சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதிகளை கொண்ட மாவட்டமாகும். இங்குள்ள வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, யானை, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியில் உள்ள கோயில்கள், ரேஷன் கடைகள் மற்றும் சாக்லேட் பேக்டரி போன்ற இடங்களில் புகுந்து அங்குள்ள பொருள்களை உண்பதும், சேதப்படுத்துவதும் தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது.இந்த நிலையில், குன்னூர் உபாசி குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு புகுந்த கரடி ஒன்று, அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டின் கதவை திறக்க முயற்சித்து, தொடர்ந்து கதவை தட்டியது. இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து தகவலறிந்து, குன்னூர் வனத்துறை வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையிலான வனக்குழுவினர் அப்பகுதிக்குச் சென்று கரடி நடமாட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். கரடி மீண்டும் அப்பகுதியில் உலா வரும் நிலையில், கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
Be the first to comment