நாகூர்: உலகப் புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்ஹாவின் 469 ஆம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் இன்று நடைபெற்றது. இதில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல்லாயிரகணக்காணோர் பங்கேற்றனர். நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு உலக புகழ் பெற்ற நாகூர் தர்ஹாவின் 469 ஆம் ஆண்டு கந்தூரி விழா கடந்த மாதம் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் நேற்றிரவு நாகப்பட்டினத்தில் துவங்கியது. இசை, தாரை தப்பட்டை என விடிய விடிய நடந்த சந்தனக் கூடு ஊர்வலமானது இன்று நாகூரை வந்தடைந்தது. நாகூர் ஆண்டவரின் கால்மாட்டு வாசலில் சந்தன குடங்கள் இறக்கப்பட்டு சமாதியில் பாரம்பரிய முறைப்படி தர்ஹா நிர்வாகிகள் சந்தனம் பூசினர். நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நாகூர் ஆண்டவர் சமாதியில் பூசப்பட்ட சந்தனம் அங்கிருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆட்டோவில் வந்து இறங்கி கந்தூரி விழாவில் பக்தர்களோடு பக்தர்களாக பங்கேற்று நீண்ட நேரம் நின்று பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவத்தில் பிரார்த்தனை செய்தார்.
Be the first to comment