கோயம்புத்தூர்: ஆனைமலை பாறைப்பதி பகுதியில் நேற்று முன்தினம் ஒரு ஆட்டுக்குட்டியை சிறுத்தை தாக்கிய நிலையில் அதனைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு அமைத்துக் கண்காணித்து வருகின்றனர். பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பாறைப்பதி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் கடந்த அக்.27ஆம் தேதி, சிறுத்தை தாக்கியதில் மேய்ச்சலில் இருந்த மூன்று கன்றுக் குட்டிகள் மற்றும் வளர்ப்பு ஆடுகள் உயிரிழந்தன. இதனையடுத்து சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையின் பேரில் ஆனைமலை புலிகள் காப்பகம் துணை கள இயக்குநர் தேவேந்திர குமார் உத்தரவின் பேரில், அப்பகுதியில் சிறுத்தை பிடிப்பதற்காக மூன்று கூண்டுகள் வைக்கப்பட்டன. மேலும் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணிக்க பொள்ளாச்சி வனச்சரக ஞான பாலமுருகன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கேமரா வைக்கப்பட்டு 24 நேரமும் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அம்மன் கோயில் அருகே தனியார் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கியது. அதனை உலாந்தி வனச்சரகம் டாப் ஸ்லிப் அடர் வனப்பகுதியில் விட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் (நவ.24) இரவு, சிறுத்தை ஒன்று மீண்டும் அதே பகுதியில் உள்ள கணேஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த ஆட்டுக்குட்டியை தாக்கியது. மேலும், அந்த பகுதிக்கு அருகேயுள்ள மற்றொரு தோட்டத்திலும் சிறுத்தையின் கால் தடம் கண்டறியப்பட்டது. அதன்படி வனத்துறையினர் கூண்டுகளை இடம் மாற்றி சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு அருகே வைத்தனர். தொடர்ந்து கேமரா மூலம் அந்த பகுதிகளை கண்காணித்து வருகின்றனர். இத்துடன் எட்டாவது முறையாக சிறுத்தை பிடிக்க அப்பகுதியில் கூண்டுகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment