வேலூர்: அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா தொடங்கிய நிலையில் இன்று வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இருந்து திருக்குடைகள் எடுத்துச் செல்லும் விழா நடைபெற்றது.வேலூர் கோட்டைக்குள் அமைந்துள்ளது ஜலகண்டேஸ்வரர் கோயில். இது ஒரு பாரம்பரிய மற்றும் பழமையான கோயிலாகும். இந்த கோயிலில் இருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதங்களில் திருக்குடைகள் எடுத்துச் செல்லும் வைபவம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நவ.17ஆம் தேதி தொடங்கிய நிலையில், அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்நிலையில் இன்று வேலூர் சாது சந்நியாசிகள் பாதுகாப்பு சமிதி சார்பில் அண்ணாமலையாருக்கு திருக்குடை எடுத்துச் செல்லும் விழா நடைபெற்றது. விழாவில் வேலூரில் இருந்து திருக்குடைகள் திருவண்ணாமலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விழா குழுவினரிடம் ஒப்படைக்கப்படும். விழாவை தொடர்ந்து திருவூடல் இசை கச்சேரி, நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது சிவ ஸ்ரீ பிரத்யங்கரா தாசன் தலைமையில் நடைபெற்ற நிலையில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், வேலூர் மேயர் சுஜாதா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சாதுக்கள், சந்நியாசிகள், துறவிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Be the first to comment