விழுப்புரம்: காந்தி சிலை அருகே உடைந்த காலோடு சாலையை கடக்க முடியாமல் தவித்த தெரு நாய்க்காக, வாகனங்களை நிறுத்தி சாலையை கடக்க வைத்த காவலரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.போக்குவரத்து நெரிசல் மிக்க விழுப்புரம் - பாண்டிச்சேரி சாலையில் காவல் நிலைய தலைமை காவலர் தீன தயாளன் நேற்று (அக்.24) இரவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு கால் உடைந்த நிலையில் ஒரு நாய் சாலையை கடக்க முடியாமல் நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்த காவலர் அவ்வழியாக வந்த வாகனங்களை சிறிது நேரத்திற்கு நிறுத்தி, அந்த நாய் சாலையை கடப்பதற்கு உதவி செய்தார்.அந்த நாயால் ஒரு காலை ஊன்ற முடியாத காரணத்தால் நொண்டி, நொண்டி பொறுமையாக சாலையை கடந்து சென்றது. நாய் அங்கிருந்து சென்ற பின்னர் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. பணியின்போது நன்றியுள்ள ஜீவனை மனிதநேயத்துடன் சாலையை கடக்க உதவி செய்த காவல் அதிகாரிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Be the first to comment