சென்னை: ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.கேளம்பாக்கம் ஓ.எம்.ஆர். சாலையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு வளாகத்தில் 14 மாடிகளை கொண்ட 15 பிளாக்குகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 750க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 3000 பேர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் ஜெ பிளாக் பகுதியில் 7வது மாடியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு குடியிருக்கும் தாயும் மகளும் நேற்று பகல் உணவு அருந்தி விட்டு அதே வளாகத்தில் உள்ள மற்றொரு பிளாக்கில் வசிக்கும் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தனர். இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து புகை வருவதால் அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் வருவதற்குள் தீ அந்த அந்த வீடு முழுவதும் பற்றியது.இதனால் அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ பரவத் தொடங்கியது. இதனால் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு கீழே ஓடி வந்தனர். குடியிருப்பின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு யாரும் லிப்டை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது.இதையடுத்து கோவளம் மற்றும் சிறுசேரி தீயணைப்பு நிலையங்களில் இருந்து இரண்டு வாகனங்கள் வந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் அந்த குடியிருப்பு முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுவதும் அணைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Be the first to comment