அரியலூர்: அரியலூரில் இன்று காலை கடுமையான பனி மூட்டம் நிலவியதால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அரியலூரில் இன்று வழக்கத்திற்கு மாறாக கடும் பனி மூட்டம் காணப்பட்டது. வீடுகளில் இருந்து வெளியே வந்த மக்கள், கடும் பனி மூட்டத்தைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். வீடுகளுக்கு எதிரே உள்ள மரங்கள், அருகில் உள்ள வீடுகள் கூட கண்ணுக்கு தெரியாத அளவிற்கு எங்கு பார்த்தாலும் பனி மூட்டமாக இருந்தது. மேலும் சாலைகளில் பயணித்த இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிர விட்டு சீரான வேகத்தில் சென்றன. மார்கழி, தை மாதங்களில் மட்டுமே கடும் குளிரும், பனிப்பொழிவும் இருக்கும் சூழலில் இந்தாண்டு ஐப்பசி மாதத்திலேயே இவ்வளவு பனிப் பொழிவு காணப்பட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அரியலூரை சுற்றியுள்ள திருமானூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், செந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பனி மூட்டம் காணப்பட்டது.
Be the first to comment