திண்டுக்கல்: புலவிச்சாறு அருவியில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ள நிலையில் அதன் ட்ரோன் காட்சிகள் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கொடைக்கானல் அருகே போளூர் மலைக் கிராமத்தில் புலவிச்சாறு அருவி அமைந்துள்ளது. சமீபகாலமாக அந்த அருவியை காண அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழையால் அருவியின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. மரங்கள் நிறைந்த மலைப்பகுதியின் பாறைப் பிளவுகளிலிருந்து நீர் ஆர்ப்பரித்து கொட்டிவரும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் பார்ப்பவர்களை மெய்மறக்க செய்கிறது. இந்த கிராம மக்கள், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை தொழிலாக மேற்கொண்டு இயற்கையுடன் இணைந்து வாழ்கின்றனர். மழைக்காலத்தில் அருவியின் நீர் அதிகரிப்பு, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி விவசாயத்திற்கு உதவுகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், அருவியின் குளிர்ந்த நீரில் நீராடி, மலைக்காற்றை சுவாசித்து, மனஅமைதியைப் பெறுகின்றனர். இந்த இடம் கொடைக்கானலில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேல்மலை கிராமத்தில் இருந்து பசுமையுடன் எழில் கொஞ்சும் அழகுடன் காட்சியளிக்கிறது. அங்கிருந்து ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
Be the first to comment