கோயம்புத்தூர்: சாலக்குடி-அதிரப்பள்ளி பகுதியில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை விரட்டிய காட்டு யானையின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த தமிழக கேரள எல்லையான சாலக்குடி-அதிரப்பள்ளி செல்லும் சாலையில் தினந்தோறும் யானைகள் உலா வருவது வழக்கம். வால்பாறையை சுற்றிப் பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த சாலையை பயன்படுத்துவார்கள். இந்நிலையில், காரில் சென்ற சுற்றுலா பயணி ஒருவரின் வாகனத்தை காட்டு யானை தாக்க முற்பட்டுள்ளது. உடனே சுதாரித்துக் கொண்ட வாகன ஓட்டி, வாகனத்தை லாபகமாக இயக்கி அங்கிருந்து தப்பினார். இருப்பினும் அந்த வாகனத்தை காட்டு யானை தொடர்ந்து விரட்டியதால், பின்னால் வந்த வாகன ஓட்டிகள் அச்சத்தில் ஆழ்ந்தனர். இதனால் அதிரப்பள்ளி சாலையில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வாகனத்தை கவனமாக ஓட்டி செல்ல வேண்டும் என கேரளா வனத்துறை சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் கூறுகையில், "காட்டு யானைகள் நடமாட்டம் தற்போது சாலைகளில் அதிகமாக உள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் யானைகளை கண்டால் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க கூடாது" எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Be the first to comment