சேலம்: 56 அடி உயர ராஜ முருகன் சிலைக்கு இன்று குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தாரமங்கலம் அடுத்த அணைமேட்டில் ராஜ முருகன் ஆசிரமம் உள்ளது. இங்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 56 அடி உயர பிரம்மாண்ட முருகன் சிலை அமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆனால், அந்த சிலை முனியப்பன் சிலை போல இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தது. மேலும் அந்த சிலையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கடும் விமர்சனத்துக்கு ஆளானது. இதையடுத்து அந்த சிலையை ஆசிரம நிர்வாகம் பெரும் பொருள் செலவில் மாற்றி, தற்போது அழகு ராஜமுருகன் சிலையை புதியதாக அமைத்துள்ளது. சேலம் மாவட்டத்தில் பெத்தநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள முத்துமலை முருகன் கோயிலில் 100 அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டத்தில் இரண்டாவதாக அதிக உயரம் கொண்ட பிரமாண்ட முருகப்பெருமான் சிலை இதுவாகும். அந்த சிலைக்கு இன்று காலை கும்பாபிஷேகம் கோலகாலமாக நடைபெற்றது .இதற்காக கடந்த 17-ம் தேதி முகூர்த்தக்கால் நட்டு, கும்பாபிஷேக விழா துவங்கியது. இன்று கால யாக பூஜை முடிந்த நிலையில், பிரமாண்ட முருகன் சிலை மீது புனித தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராஜ முருகனை வழிபட்டு சென்றனர். இங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Be the first to comment