திருநெல்வேலி: பணகுடி அருகே விவசாய நிலத்தில் இருந்த அரிய வகை எறும்பு தின்னி மீட்கப்பட்டு, பாதுகாப்பாக வனப் பகுதியில் விடப்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே புஷ்பவனத்தில், ஜான் என்பவரின் விவசாய நிலத்தில் அரிய வகை எறும்பு தின்னி ஊர்ந்து சென்றதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். இதனையடுத்து, வள்ளியூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் எறும்பு தின்னியை மீட்டு திருக்குறுங்குடி வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட எறும்பு தின்னியை வனத் துறையினர் திருக்குறுங்குடி வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் விட்டனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த அரிய வகை எறும்பு தின்னி வனப்பகுதியில் அதிகளவில் காணப்படும். இவை அங்குள்ள கரையான், எறும்பு, சிறிய பூச்சிகளை உணவாக உட்கொள்ளும். பணகுடி அருகே மீட்கப்பட்ட ஒரு மீட்டர் நீளமுள்ள எறும்பு தின்னிக்கு எட்டு முதல் 10 வயதுக்குள் இருக்கும். இந்த எறும்பு தின்னிகள் பொதுவாக 30 வயது வரை வாழக் கூடியது. இவை மனித நடமாட்டம் இருந்தால் உறுப்புகளை சுருட்டிக்கொண்டு பந்து போன்று மாறி விடும் தன்மை கொண்டவை.
Be the first to comment