அரியலூர்: காரைக்குறிச்சி சாலையில் பள்ளி நேரத்தில் செம்மண் லாரிகள் இயக்குவதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறி செம்மண் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழ மிக்கேல்பட்டி பகுதியில் இருந்து செம்மண் வெட்டப்பட்டு தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 500-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மூலம் எடுத்துச் சொல்லப்படுகிறது. இதனால் நாள்தோறும் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வந்தது. அதே நேரத்தில் விதிமுறைகளை மீறி பள்ளி நேரத்தில் செம்மண் லாரிகள் அதிகளவு இயக்கப்படுவதால் மாணவர்கள் அச்சத்தோடு செல்வதாகவும், அதிக அளவில் விபத்துகளை சந்திப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டி இருந்தனர். இந்த நிலையில் காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சாலையில் 50-க்கும் மேற்பட்ட செம்மண் லாரிகளை மறித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது இந்த பகுதியில் சட்ட விதிமுறைகளை மீறி அதிக ஆழத்தில் செம்மண் முறைகேடாக வெட்டப்படுவதாகவும், பள்ளி செல்கின்ற நேரத்தில் லாரிகள் அதிகளவு இயக்கப்படுவதால் மாணவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.பின்னர் இது குறித்து தகவல் அறிந்த போலீசார், போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விதிமுறைகளை மீறும் லாரிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Be the first to comment