கரூர்: ரத்தினகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ள அய்யர் மலையின் படிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த ஒரு வார காலமாகவே பெரும்பாலான மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கரூரில் நேற்று (அக்.21) மாலை தொடங்கிய மழை இன்று காலை வரை இடி, மின்னலுடன் விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பும் நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவதற்கு கரூர் மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே ரத்தினகிரீஸ்வரர் ஆலயத்தில் தொடர் மழையால் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குளித்தலை தாலுக்கா அய்யர்மலையில் இந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலானது சுமார் 1,200 அடி உயரத்தில் மலை உச்சியில் உள்ளது. மலை மீது ஏறி சாமியை தரிசனம் செய்ய வருபவர்கள் சுமார் 1,017 படிகளை கடந்து கோயிலுக்குள் செல்ல வேண்டும். இதற்காக பக்தர்களுக்கு ரோப் கார் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக படிகள் வழியாக நீர் வீழ்ச்சி போன்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
Be the first to comment