நீலகிரி: தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் நேற்று மதியம் முதல் நீலகிரியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகள் குளிர்ச்சியுடன் மிளிர, சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகை அனுபவித்தாலும், சுற்றிப்பார்க்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.நேற்று மதியம் திடீரென ஊட்டி நகரப் பகுதியில் தொடங்கிய மழை, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக குன்னூர், கோத்தகிரி, லவ்டேல், கேத்தி, கேட்லி, முத்தோரை, பாலாடா உள்ளிட்ட பகுதிகளிலும் கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் நீர் தேங்கி, வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்துகளில் இருந்து இறங்கிய பொதுமக்கள் கடைகளின் முன் தஞ்சம் அடைந்தனர். மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தாலும் தேயிலை தோட்டங்கள் மற்றும் விவசாய பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இன்றும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Be the first to comment