நீலகிரி: குன்னூர், ஊட்டி, கோத்தகிரி போன்ற பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மண்ணின் ஈரத்தன்மை அதிகரித்து மாவட்டத்தில் பல இடங்களில் மரங்கள் விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாரல் மழையால் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரித்து, பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.இந்நிலையில், குன்னூர் அம்பேத்கர் நகர் பகுதியில் ராட்சத மரம் விழுந்ததில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நான்குக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இது தொடர்பாக, குன்னூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், மின்சார துறையினர் மற்றும் குன்னூர் நகராட்சி பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு ராட்சத மரத்தை அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.மேலும், சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகி, வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். தொடர் மழையுடன் கடும் குளிர் நிலவுவதால், சுற்றுலா தலங்களில் உள்ள சாலையோர வியாபாரிகள் மற்றும் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
Be the first to comment