ஈரோடு: எத்துக்கட்டி வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய இரண்டு காட்டு யானைகள், அப்பகுதியில் உள்ள கோயில் தண்ணீர் தொட்டியில் நீர் அருந்தி சென்ற வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், அப்பகுதியில் உள்ள கிராமங்களில் புகும் நிகழ்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தாளவாடியில் உள்ள மலை கிராமங்களில் யானைகள் கூட்டம், கூட்டமாக நடமாடுகின்றன. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.இந்நிலையில், எத்துக்கட்டி வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய இரண்டு காட்டு யானைகள், அப்பகுதியில் உள்ள கோயில் தண்ணீர் தொட்டியில் நீர் அருந்தின. பின்னர், மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது. இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.அதேபோல், ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, திம்பம் மலைப்பாதை 3-வது கொண்டை ஊசி வளைவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை வழி மறித்து உணவு தேடியது. இதனால், ஓட்டுநர்கள் அச்சமடைந்ததுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
Be the first to comment