நீலகிரி: உதகையில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இடையே திடீர் பனிமூட்டம் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் திடீரென வானிலை மாறி கடும் மேகமூட்டம் பனி மழையாக பெய்த காட்சி இணையத்தில் வெளியாகி நெகிழ்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை முதலே உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா உள்ளிட்ட மலைப் பகுதிகளில் கடும் வெண்பனி மூட்டம் உருவாகியது. குறிப்பாக குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் உதகை - குந்தா நோக்கிச் செல்லும் சாலைகளில் வெண்பனி மூட்டங்களாக காணப்பட்டது. அதனால், சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமலும், பாதை தெரியாமலும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.அதனால், வாகன ஓட்டுநர்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி, மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்கி சென்றனர். சில இடங்களில் வெண் மேகம் முழுமையாக சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றதால் தாமதமாக உதகைக்குச் சென்றடைந்தது. மாவட்டம் முழுவதும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்ததால் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் குளிர் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. நீலகிரி மலைப் பகுதிகளில் அடுத்த சில நாட்கள் இதேபோன்ற பனி மூட்டத்துடன் சாரல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் வெப்பநிலை மேலும் குறையலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Be the first to comment