அரியலூர்: ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் தடுமாறி கீழே விழவிருந்த நிலையில், ரயில்வே தலைமை காவலர் அப்பெண்ணை பத்திரமாக காப்பற்றினார். இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.விழுப்புரத்திலிருந்து - திருச்சி செல்லும் வண்டி (56111) நேற்று அரியலூர் ரயில் நிலையம் முதலாவது நடைமேடைக்கு வந்தது. அப்போது, பயணிகள் அனைவரும் ரயிலில் ஏறினர். இதனையடுத்து ரயில் அங்கிருந்து கிளம்பிய சமயத்தில், இரண்டு பெண்கள் ஓடும் ரயிலில் ஏற முயன்றனர். இதில், ஒருவர் உள்ளே சென்ற நிலையில், இரண்டாவதாக ஏற முயன்ற பெண், நிலை தடுமாறி ரயிலில் இருந்து கீழே விழவிருந்தார். இந்த சமயத்தில் நடைமேடையில் நின்றிருந்த ரயில்வே தலைமை காவலர் செந்தில் குமார், துரிதமாக செயல்பட்டு அந்த பெண் பயணியை காப்பாற்றி ரயிலின் உள்ளே தள்ளினார். இதனையடுத்து, உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த ரயில் திருச்சி நோக்கி புறப்பட்டு சென்றது.இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. பெண் பயணியின் உயிரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் செந்தில்குமாரை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Be the first to comment