ஈரோடு: திம்பம் மலைப் பாதையில் சாலையில் தேங்கிய மழை நீரை அருந்தும் சிறுத்தையின் வீடியோ காட்சி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இப்பகுதியில், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, மான்கள், செந்நாய்கள், கழுதைப் புலி என பல்வேறு விலங்குகள் உள்ளன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர், திம்பம் மலைப் பாதையில் சிறுத்தைகள் அதிகளவில் நடமாடுகின்றன. சிறுத்தை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 30 கிமீ வேகத்துக்கு குறைவாக வாகனங்களை இயக்க வேண்டும், சாலையில் விலங்குகள் நடந்து செல்லும் போது வாகனங்கள் நின்று செல்ல வேண்டும் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, திம்பம் 19 வது வளைவு பகுதியில் லேசான தூறல் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக சென்ற காய்கறி லாரி ஓட்டுநர், திம்பம் வளைவில் சிறுத்தை தண்ணீர் குடிப்பதை பார்த்து அதை வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார். சிறுத்தை சாதாரணமாக திம்பம் பகுதியில் நடமாடுவதால் இரவு நேரத்தில் மலைப் பாதையில் இறங்க வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது.
Be the first to comment